'ரசிகர்கள் ரூ. 50, 100 னு ஒரு லட்சம் வரை அனுப்பிருக்காங்க; அவங்கள வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேன்!' - பொன்னம்பலம்  உருக்கம்

0 174967
நடிகர் பொன்னம்பலம்

1990 - களில் வெளிவந்த தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்றவர் பொன்னம்பலம். சினிமாவில் சண்டைக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி படிப்படியாக வில்லனாக வளர்ந்தவர் இவர். 'உன்னால் முடியும் தம்பி ' படத்தில் சண்டைக் கலைஞராகத் தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கிய பொன்னம்பலம் இதுவரை 500 - க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைக் கலைஞராகவும் 200 க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார்.

சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்ட பொன்னம்பலம், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது சிகிச்சை முடிந்து குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த இக்கட்டான சூழலில்,  ஸ்டண்ட் யூனியன் தன்னைக்  கைவிட்டு விட்டதாகவும் ரசிகர்களும் சக கலைஞர்களும் தான் உதவி செய்துள்ளனர் என்று பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

image

உடல் நலன் குறித்து பொன்னம்பலத்திடம் பேசிய போது, "கொரோனா பிரச்னையால பல பேரோட கஷ்டங்கள் வெளில் தெரியாமலே மறைஞ்சி போயிடுது. இறந்தவங்கள சொந்தகாரவங்க கூட போய் பார்க்க முடியாத சூழல் தான் இப்போ இருக்குது. அந்த வகைல எல்லாருக்கும் நடக்கற சங்கடங்கள் தான் எனக்கும் நடந்தது. எல்லா ஹாஸ்பிட்டல்லையும் கொரோனா நோயாளிகள் இருந்ததுனால என்னோட உடல் நலப் பிரச்னைக்கு உடனே மருத்துவமனைக்குப் போக முடியல. உடம்பு சரியில்லைன்னா மெடிக்கல்ல ஒரு மாத்திரைய கூட கொடுக்கமாட்டங்குறாங்க. மாத்திரை கிடைக்காம, மருத்துவம் பார்க்காம என்னோட உடல் நிலை மோசமாச்சு. ஒரு கட்டத்துல மூச்சு கூட விட முடில. உடம்பு சீரியஸ் ஆகிடுச்சி.

மருத்துவமனைக்குப் போனா ஐசியு முழுக்க கொரோனா நோயாளிகள் இருந்தாங்க. எனக்கு அட்மிஷன் கிடைக்கவே இல்லை. ஒரு சில நாள் காத்திருந்து தான் எனக்கு அட்மிஷன் கிடைச்சுது. கொரோனாவோன்னு டெஸ்ட் எடுத்தா டெகட்டிவ். அப்புறம் தான் நிம்மதியா இருந்துது. சிறுநீரகப் பிரச்னைக்கு டிரீட்மெண்ட் எடுத்துகிட்டேன். கொரோனாவால யாருமே வந்து பார்க்கல. தற்கொலை எண்ணம் கூட மனசுல ஓடுச்சு. மோசமான காலம் அது. இப்போ பரவால்ல; நடக்க ஆரம்பிச்சிட்டேன்.

இந்த இக்கட்டான கால கட்டத்துல என்னோட சண்டை கலைஞர்கள் யூனியன் எனக்கு எந்தவிதத்துலையும் உதவி செய்யல. எனக்கு வரவேண்டிய ஐந்து லட்சம் ஓய்வூதியத் தொகை கூட இன்னும் கொடுக்கல. காரணம் கேட்டா, சந்தா கட்டல, உறுப்பினரே இல்லண்ணு கதை விடுறாங்க. 34 வருசத்துக்கு முன்னாடியே ரூ, 5000  கட்டி ஸ்டண்ட் யூனியன்ல உறுப்பினரா சேர்ந்தேன். அப்போ அந்த காசுக்கு ஒரு நிலத்தை வாங்கிருந்தா இன்னைக்கு நானு கோடீஸ்வரன். என் பிரச்னைய தீர்க்க கோர்ட் வரைக்கும் கூட போய் பார்த்துட்டேன். பலன் இல்லை.

இந்த இக்கட்டான சூழல்ல எனக்கு உதவி செஞ்சது நடிகர்களும் என்னோட ரசிகர்களும் தான். அர்ஜூன், சரத்குமார், தனுஷ்லாம் எனக்கு உதவி செஞ்சிருக்காங்க. என்னோட ரசிகர்கள் என்னோட கஷ்டத்தைத் தெரிஞ்சிகிட்டு 100, 50 ன்னு ஒரு லட்சத்துக்கும் மேல பேங்குல டெபாசிட் பன்னிருக்காங்க. அவங்கதான் எனக்கும் தெய்வம். ஆனால் எனக்கு தேவையான அளவுக்கு சக நடிகர்கள் உதவி செஞ்சிருக்கதறதுனால ரசிகர்கள் அனுப்பி வைச்ச பணத்த அப்படியே ஸ்டண்ட் யூனியனோட அக்கவுண்டுக்கு இன்னைக்கு காலைல அனுப்பி வச்சிட்டேன். என்ன மாதிரி கஷ்டப்படற என் சக ஸ்டண்ட் கலைஞர்களுக்கு அந்த பணம் உதவனும். என்னோட பணத்த யூனியன் ஏத்துக்கணும். அரசாங்கத்துக்கு நானு ஒரேயொரு கோரிக்கைதான் வைக்கறேன். கொரோனா பிரச்னையினால மத்த நோயாளிங்க ரொம்பவும் கஷ்டப்படுறாங்க. அவுங்களுக்கும் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments